சென்ற இதழ் தொடர்ச்சி...
பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி
திருமணத்தைக் குறிக்கும் 7-ஆம் பாவகத்தில் நவகிரகங்கள் நின்ற பலனைக் காணலாம்.
ஆண்- பெண் இருவர் ஜாதகத்திலும் 7-ஆமிடம், 8-ஆமிடம் இரண்டும் சுத்தமாக இருக்கவேண்டும். அதேநேரத்தில் 7, 8-ஆம் இடங்கள் சுத்தமாக இருந்தால் மட்டும் அது சுத்த ஜாதகமாகாது. நவகிரகங்கள் 7-ஆம் பாவகத்தோடு பெறும் சம்பந்தமும், ஜாதகத்திலுள்ள தோஷங்களுமே 7-ஆம் பாவகத்தின் பலம், பலவீனத்தைத் தீர்மானம் செய்யும் காரணிகள்.
2, 7-ஆம் பாவகங்களே மற்ற பத்து பாவகங்களையும் இயக்குகின்றன. 7-ஆம் பாவகமும், அதன் அதிபதியும், அதில் அமரும் கிரகமும் ஜாதகருக்கு வாழ்க்கைத் துணையைத் தீர்மானித்து வழிநடத்துகிறது. ஜாதகரின் தலைமுறையினரால் தீர்க்கப்பட வேண்டிய அனைத்து கர்மாவையும் 7-ஆம் பாவகத்தில் அமரும் கிரகமே தீர்மானிக்கிறது.
7-ல் சூரியன் நின்றால் ஜாதகரின் தந்தை, தந்தைவழி உறவினர்கள் சிவன் கோவில் சொத்தை அபகரித்த குற்றம், அரசாங்கத்தை ஏய்த்த குற்றம். 2, 7, 8-ல் சூரியன் இருந்தால் காலதாமதமாகத் திருமணம் நடைபெறும். மகரம், கும்ப லக்னங்களுக்கு ஆட்சி பெற்ற சூரியன் 7, 8-ல் அமர்ந்தால் விதிவிலக்கு உண்டு. அதேநேரத்தில் துலா லக்னத்திற்கு சூரியன் 7-ல் உச்சமடைந்தால் தார தோஷம்.
7-ல் சந்திரன்- தாய், தாய்வழி முன்னோர்களின் தொடர்ச்சியாகும். தினமும் கண்ணீர் விட்டழுத பெண் சாபம், மனக்குமுறல், வாழவந்த பெண்ணின் சாபத்தைக் குறிக்கும். மகர லக்னத்தைத் தவிர ஏனைய லக்னத்திற்கு சந்திரனுடன் சம்பந்தம் பெறும் கிரகத்தைப் பொருத்து இருதார யோகம் அல்லது தவறான நட்பை ஏற்படுத்தும்.
7-ல் செவ்வாய் நின்றால் ஜாதகரின் தாய்- தந்தை வழியாரின் முன்வினைத் தொடர்ச்சி. உஷ்ண தேகம், அதீத இல்லற இன்ப நாட்டம் போன்றவை ஏற்படும். சகோதர வழியில் பூமி தொடர்பான கருத்து வேறுபாட்டால் ஏற்படும் களத்திர தோஷம்.
7-ல் புதன்- இளம்வயதில் திருமணம் நடைபெறும். நல்ல வசதியான களத்திரம் அமையும். திடீர் திருமணம் ஏற்படும். புதன் அஸ்தங்கம் அடையாமலும், பாவ கிரகங்களின் சேர்க்கை பெறாமலும் இருக்கவேண்டும்.
7-ல் குரு இருந்தால் நல்ல களத்திரம் அமையும். குருவையும் தந்தையையும் மதிக்கத் தவறுவார். மனைவிவழி லாபம் உண்டு. மனைவி சொல் கேட்பவர். குடும்ப வாழ்க்கை மிகுந்த வளமுள்ளதாக, இனிமையானதாக இருக்கும். காதல் திருமணம் நடைபெற வாய்ப்புண்டு. அதிக லாபம் தரும் தொழில் அமையும். திருமணத்திற்குப் பிறகு பணம் சேரும்.
7-ல் சுக்கிரன்- கணவன்- மனைவி கருத்து வேறுபாடு ஏற்படும். அழகிய தோற்றமுள்ள களத்திரம் அமையும். சிற்றின்பப் பிரியர். பிற பெண்களை விரும்புவார். வீட்டிற்கு வாழவந்த பெண்ணைத் துன்புறுத்திய குற்றம் உண்டு.
7-ல் சனி- உழைப்புக்கேற்ற வருவாய் இல்லாதவர். மந்தமான போக்குடையவர். குடும்ப உறுப்பினர்களிடம் கருத்து வேறுபாடு உடையவர். பிரச்சினைகளில் தோல்வியே ஏற்படும். திருமணம் தாமதமாக நடக்கும். மனைவி தனக்கு அடங்கியே இருக்கவேண்டுமென்று விரும்புவார். பலதார யோகம் அல்லது விதவைத் தொடர்பிருக்கும். தனது குலப் பெருமைக்கு விரோதமான திருமண பந்தம் ஏற்படும். மனைவியின் வயது, கல்வி, செல்வ வளம் தன்னைவிட அதிகமாக இருக்கும். நல்ல நண்பர்கள் அமையமாட்டார்கள். கூட்டுத் தொழில் சிறப்பில்லை.
7-ல் ராகு- சாமர்த்தியம் மிக்கவர். தற்பெருமை, பொறாமை குணமுடையவர். உறவினர்களுடன் வீண் பகை ஏற்படும். பழிவாங்கும் குணமுடையவர். நோயுடைய மனைவி அமைவார். கருத்து வேறுபாடும் உண்டு. இருதாரம் ஏற்படும்.
7-ல் கேது- கால தாமதத் திருமணம் நடைபெறும். அந்நிய உறவில் தாரம் அமையும். பெண்களுடன் ரகசிய தொடர்பு ஏற்படும். விதவை அல்லது தீய பழக்கமுள்ள பெண்களுடன் உறவு ஏற்படும்.
மனைவியைக் கொடுமைப்படுத்துவதில் இன்பம் காண்பார். தண்ணீர் கண்டம் உண்டு. திருமண வாழ்வில் சலிப்புடையவர். கடனாளியாக இருப்பார்.
புதிய சமுதாயத்தை உருவாக்கும் இரு மனங்களின் இணைவான திருமணம் மனித வாழ்வின் மகத்தான அத்தியாயம்.
இத்தகைய திருமண வாழ்க்கையை 7-ஆம் பாவத்துடன் சம்பந்தம் பெறும் கிரகங்களைக் கொண்டு எப்பொழுது திருமணம், எத்தகைய திருமண வாழ்வு அமையும் என்பது போன்றவற்றைப் பார்த்தோம். இனி 7-ஆம் பாவகம் தொடர்பான தோஷங்களைக் காண்போம்.
உரிய வயதில் திருமணம் நடைபெறாமல் போவதற்கு நம்மில் பலர் சொல்லும் தோஷம் ராகு- கேது, செவ்வாய் தோஷம் மட்டுமே.
இனிமையான திருமண வாழ்வுக்கும் இன்னல்கள் அதிகம் தரும் தோஷங்கள் பல உள்ளன. ஆனால் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய தோஷங்களில் சிலவற்றை இங்கு தந்துள்ளோம்.
● பித்ரு தோஷம்
● செவ்வாய் தோஷம்
● சர்ப்ப தோஷம்
● கிரகணங்களால் ஏற்படும் தோஷம்
● சனி தோஷம்
● கிரக இணைவுகளால் ஏற்படும் தோஷம்
● புனர்பூ தோஷம்
● விஷக் கன்னிகா தோஷம்
● களத்திர தோஷம்
● தார தோஷம்
● பிரம்மஹத்தி தோஷம்
● திதி சூன்ய பாதிப்பு
ஜாதகம் பார்க்க வருபவர்களில் பலர் களத்திர தோஷம் மற்றும் தாரதோஷத்தைத் தவறாகப் புரிந்துவைத்திருக்கிறார்கள். களத்திர தோஷம் என்பது திருமணம் தொடர்பான 1, 2, 7, 8 ஆகிய பாவங்களில் இயற்கை பாவ கிரகங்கள் அமர்வது அல்லது ஏழாம் பாவகாதிபதி நீசம், அஸ்தமனம் அடைவது, 7-ல் சுக்கிரன் இருப்பது போன்றவையாகும்.
7-ஆம் அதிபதி 3, 5, 10-ல் அமர்தல் அல்லது 3, 5, 10-ஆம் அதிபதிகள் 7-ல் சம்பந்தம் பெறுவதும் களத்திர தோஷமாகும். களத்திர தோஷம் அமையப் பெற்ற ஜாதகருக்கு எதிர்பார்த்ததைப் போன்று மணவாழ்க்கை அமையாது. கால தாமதத் திருமணம், திருமண வாழ்வில் ஏமாற்றம், பிரச்சினையுடன் கூடிய மணவாழ்க்கை, களத்திரத்தினால் பெருமளவு ஆதாயம் இல்லாமை, கணவன்- மனைவி கருத்து வேற்றுமையுடன் இல்லறம் நடத்துதல் ஆகியனவாகும். களத்திர தோஷத்தினால் கணவன்- மனைவிக்குள் ஆயுள் குறைவோ, மாங்கல்ய பாக்கியக் குறைவோ ஏற்படாது.
தாரதோஷம் (யோகம்) என்பது ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட குடும்பம் அமைவது.
தார தோஷம் ஏற்படக் காரணம் 2, 7-ஆம் பாவகத்தைவிட 11-ஆம் பாவகம் வலிமை பெறுவதே. 11-ல் இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட கிரகங்கள் அமர்ந்தாலும் ஜாதகருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் அமையும் என்பது ஜோதிட விதியாகும்.
7-ஆம் அதிபதி மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகிய சர ராசியில் நின்றால் அந்த ஜாதகருக்கு இரு மனைவியர் உண்டு. மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய உபய ராசியில் நின்றால் ஜாதகருக்கு அநேக தாரங்கள் உண்டு.
ஆண் ஜாதகத்தில் குருவுடன் அதிக பெண் கிரகம் சம்பந்தம் பெற்றால் மற்றும் லக்னாதிபதி சுக்கிரன் வீடுகளாகிய ரிஷபம், துலா ராசியில் நின்றிருந்தால் அந்த ஜாதகர் மங்கையர்மீது மாளாத மோகம் கொண்டிருப்பார்.
11-ஆம் அதிபதி, லக்னாதிபதி 2, 7-ஆம் அதிபதிகளுடன் சம்பந்தம் பெறுதல், 2, 7-ஆம் அதிபதி 11-ஆம் அதிபதி சம்பந்தம், 11-ல் சுக்கிரன் இரண்டு தாரத்தை உருவாக்கும்.
எந்த விளைவாக இருந்தாலும் தசாபுக்தி கோட்சார கிரகங்கள் தொடர்புபெறும் காலங்களில் மட்டுமே சுப- அசுப விளைவுகள் ஏற்படும். திருமணத்தைப் பொருத்தவரை எப்படியான பிரச்சினைகள் இருந்தாலும், இணைக்கும் ஜாதகமே சரியான தீர்வு தரக்கூடியதாக இருக்கவேண்டும்.
ஸ்தூலப் பொருத்தமான நட்சத்திரப் பொருத்தம் பார்க்கக்கூடாது. சூட்சுமப் பொருத்தம் என்ற ராசிக்கட்டத்தை வைத்துப் பொருத்தம் பார்ப்பதே சிறப்பு.
உலகில் கோடிக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள். நாம் பழக்கம் வைத்துக்கொண்டிருப்பவர்கள் ஆயிரக்கணக்கு.
ஆனால் ஏதோ ஒரு குறிப்பிட்ட நபர் நமக்குத் துணைவராக அல்லது துணைவியாக அமைவது ஏன்?
நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்விலும் ஒரு கர்மாவை நாம் ஏற்படுத்துகிறோம்.
அதாவது அந்தக் கர்மாக்களின் மூலம் ஒன்று. நாம் ஏதாவது பெற்றுக்கொள்கிறோம் அல்லது அடுத்தவருக்கு ஏதேனும் ஒரு உபகாரம் செய்கிறோம். சில சமயங்களில் ஏமாற்றப்படுகிறோம். பல சமயங்களில் ஏமாற்றுகிறோம். சிலருக்கு நல்லது செய்கிறோம். பலரிடமிருந்து அளவுக்கதிகமாக நன்மைகளைப் பெற்றுக்கொள்கிறோம். இந்த கொடுக்கல் வாங்கலே "ருண பந்தம்' எனப்படுகிறது.
சிலருடைய உறவுகள் ஆனந்தத்தைக் கொடுக்கிறது. சிலருடைய வருகை மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. சிலர் கூடவே இருந்து தொல்லைப்படுத்துகிறார்கள். சிலரின் வருகை துக்கத்தை ஏற்படுத்துகிறது. பல சமயங்களில் இது ஏன் நிகழ்கிறது என்று தெரியாமலேயே தன் போக்கில் நம் வாழ்வில் பல நிகழ்ச்சிகள் நடக்கின்றன. கனவில்கூட காணமுடியாத பல ஆச்சரியங்கள் நமக்கு சிலசமயங்களில் ஏற்படுகிறது. இதற்கெல்லாம் என்ன காரணம்?
நாமே நம் தாயை, தந்தையை, சகோதர- சகோதரிகளை, நண்பர்களை, மனைவியை, கணவனை, பிள்ளைகளைத் தேர்ந்தெடுப்பதில்லை. நண்பர்களைத் தேர்ந்தெடுக்கலாம் என்று யாரேனும் கூறலாம். ஆனாலும் அதுவும் தானே நிகழவேண்டும். நம்மால் உருவாக்க முடியாது.
முயற்சி மட்டுமே நம்முடையது. முடிவு?
ஒருசிலர் நம் வாழ்க்கையிலிருந்து திடீரென்று காணாமல் போய்விடுவர். அது இறப்பால் மட்டுமே அல்ல. பல காரணங்களினால் நிகழும். அதே நபர் மீண்டும் நம் வாழ்வில் வேறு கோணத்தில் வேறு பார்வையில் தோன்றுவார்.
ஏதோ ஒன்று நம்மை அடுத்தவர்பால் ஈர்க்கிறது. அல்லது அடுத்தவரைக் காரணமில்லாமல் வெறுக்க வைக்கிறது. அது என்ன? சமன்செய்யாமல் மிச்சம் வைத்திருக்கும் கர்மகதிகளின் எச்சங்களே அவ்வாறு ஒரு ஈர்ப்பை அல்லது வெறுப்பை ஏற்படுத்துகிறதா? இதற்கெல்லாம் தெரிந்த ஒரே காரணம் நம்முடைய "கர்மவினை'தான்.
இதுநாள்வரை எத்தனையோ பிறவிகளை நாம் கொண்டிருக்கிறோம். அத்தனைப் பிறப்பிலும் பலப்பல பாவ புண்ணியங்களைச் சேர்த்திருக்கிறோம். அந்தக் கூட்டின் பெயரே "சஞ்சித கர்மா' எனப்படுகிறது. அதன் ஒரு பகுதி இந்தப் பிறவியில் அனுபவிக்கக் கொடுக்கப்படுகிறது.
அதுவே "பிராப்த கர்மா' எனப்படுகிறது. இந்த பிராப்த கர்மா நிறைவடையாமல் நம்முடைய இந்தப் பிறவி முடிவடையாது. நாம் இவ்வுலக வாழ்க்கையிலிருந்து விடுதலை பெற முடியாது.
இந்த வாழ்க்கை நடைமுறையில் நாம் ஒவ்வொருவரிடமும் ஏதேனும் ஒன்றைக் கற்கிறோம் அல்லது கற்பிக்கிறோம். இதில் நாம் அனைவரும் அதிகமாகக் கற்பது அல்லது கற்பிப்பது நம் துணையுடன் மட்டுமே.
இதுதவிர "ஆகாமிய கர்மா' என்று ஒன்றுள்ளது. அது கொடுக்கப்பட்டுள்ள இந்தப் பிறவியில் நாம் செய்யும் நல்ல- கெட்ட செயல்களால் ஏற்படுவது. யாராலும் யாருக்கும் எந்த கர்மாவையும் ஏற்படுத்தவோ உருவாக்கவோ முடியாது. அவரவர் செய்வினையின் பயனாலேயே அவரவர் அனுபவம் மற்றும் வாழ்க்கை அமையும்.
துக்கமும், சந்தோஷமும், சண்டையும், சமாதானமும், ஏற்றமும், இறக்கமும், வெறுப்பும், ஆதரவும் அவரவர் கர்மகதியே. இதைத்தான் "தீதும் நன்றும் பிறர் தர வாரா' என போதித்துள்ளனர்.
நம்முடைய நல்ல- கெட்ட காலங்களுக்கு நாம் மட்டுமே பொறுப்பு. அப்படியென்றால் ஆகாமிய கர்மா நம்முடைய கையிலேயே இருக்கிறது. "இந்தப் பிறவியில் யார் எப்படி இருந்தாலும், நீ எப்படி இருக்கப் போகிறாய் என்பது உன் கையிலேயே உள்ளது. நீ செய்யும் நற்செயல்களையும், வினைச்செயல்களையும் நீ மட்டுமே ஏதோ ஒரு பிறவியில் அனுபவிக்கப் போகிறாய் என்பதை உணர்ந்தால், நீ என்ன செய்யப்போகிறாய்? எப்படி நடந்துகொள்ளப் போகிறாய்? எதுபோன்ற வாழ்க்கைத் தடத்தை ஏற்படுத்திக் கொள்ளப்போகிறாய் என்பது உனக்குப் புலப்படும்.' இதை போதிப்பதுதான் இந்து மதம்.
பாவ புண்ணியங்களுக்குக் கூட்டல் கழித்தல் கிடையாது. இரண்டையும் நாம் அனுபவித்தே ஆகவேண்டும். பணம் மட்டுமே எல்லாப் பிரச்சினைகளையும் தீர்த்துவிடும் என்று ஒரு சித்தாந்தம் உள்ளது. ஆனால், பணமே இல்லாத ஒரு சாதாரண மனிதன்கூட தன்னுடைய வாழ்க்கையில் பல சமயங்களில் சந்தோஷமாக இருக்கிறான். அதேபோல பெரும் பணக்காரர்களையும் "துக்கங்கள்' விடுவதில்லை.
சர்க்கரை ஆலை அதிபரானாலும் உண்ஹக்ஷங்ற்ண்ஸ்ரீ ஆக இருந்தால் இனிப்புப் பண்டங்களை உண்ணமுடியாது. பல கார்களுக்குச் சொந்தக்காரராக இருந்தாலும் தனது கால்களையே நடைப்பயிற்சிக்கு நம்பவேண்டியதாக உள்ளது.
"வினை விதைத்த வழியில் விதி நடக்கும்; விதி வகுத்த வழியில் நாம் நடக்க வேண்டும்.'
நமக்கு விதிக்கப்பட்டது நம் கடமையைச் செய்வது மட்டுமே. பலனை ஆண்டவனிடம் விட்டுவிடுவோம்.
செல்: 98652 20406